போராட்டங்கள்

இளமைப்பருவம் முதலே அண்ணல்தங்கோ தமிழின உணர்வாளராகவும் நாட்டுப் பற்றுமிக்கவராகவும் பொதுநலப்பணி உணர்வினராகவும் செயற்பட்டார்.

முதலில் அண்ணல்தங்கோவின் தந்தையாரின் உயிர்த்தோழரான கருத்தான் செட்டியார் இரங்கூனில் வட்டிக்கடைத் தொழில் நடத்த உடன்படிக்கை (Contract Basis) செல்லும் நல்வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் அண்ணல்தங்கோ அவர்கள் அன்றைய இந்தியா இன்னுமா அந்நியருக்கு அடிமைப்பட்டு உழல வேண்டும், இதன் முடிவுதான் என்ன என சிந்தித்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதே சிறந்தது என உணர்ந்தார். இரங்கூன் சென்று தொழில் செய்யும் நல்வாய்ப்பை தன்னலம் பாராமல் இழந்து, 1918-ஆம் ஆண்டு காங்கிரசு எனும் விடுதலை உரிமைப் போர்ப் பேரவையில் இணைந்தார்.

1923-இல் மதுரையில் நடந்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின் தலைவராகப் பொறுப்பேற்று செயற்பட்டார். மதுரையில் வக்கில் புதுத்தெருவிலிருந்த வழக்கறிஞர் அ. வைத்தியநாத அய்யருடன் கூடி மதுரை நகர கள்ளுக்கடை மறியலைத் தலைமைத் தாங்கி நடத்தி சிறைக்குச் சென்றார். சிறையில் இருவருடன் சிதம்பர பாரதி போன்ற விடுதலை போராட்ட வீரர்களும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, நாகப்பூரில் சிவில் லைனில் தேசிய கொடியை ஏந்துவதற்கு தடையிருந்தது. அண்ணல்தங்கோ அவர்களை நாகப்பூர் கொடிப் போராட்டத்தின் தலைவராக காங்கிரசு கட்சியின் ஆலோசனைக் குழு தேர்வு செய்தது. அண்ணல்தங்கோ நாகப்பூர் சென்று சிவில் லைனில் தேசிய கொடியை ஏந்தியபடி வெள்ளைய அரசை எதிர்த்து ‘வெள்ளையனே வெளியேறு! இந்தியாவிற்கு விடுதலை கொடு’

என முழக்கமிட்டபடி, அப்போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தி, தேசிய கொடியை ஏந்திச் செல்ல தடை விதிக்கப்பட்ட சிவில் லைனில் அத்துமீறி சென்றார். வெள்ளைய அரசு அவரை கைது செய்து, 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது. நாகப்பூர், சாகர், பிடல் சிறைகளில் மாற்றி மாற்றி அலைகழிக்கப்பட்டு, சிறையில் சோளம் அடித்து, செக்கிழுத்து கடுமையான உடல்நலன் கெடுமளவிற்கு தண்டனை பெற்றார். பிடல் சிறையிலிருந்து விடுதலை பெற்றவுடன், வல்லபாய்பட்டேல், ஜமுனாலால் பஜாஜ் இருவரும் இணைந்து அளித்த  விருந்தினை ஏற்றுக் கொண்டு தமிழகம்  திரும்பினார்.

இடையில் குருகுலப் போராட்டத்தில் டாக்டர் வரதராசுலு நாயுடுவுடன் இணைந்து போராட்டம் நடத்தினார்.

தமிழர்களின் திருமணம் வாழ்வின் ஒரு இன்றியமையா நிகழ்வு. தமிழர்களின் திருமணம் என்பது அந்த தமிழர்களுக்கே எளிதில் கேட்டு புரிந்து கொள்ளக் கூடிய தமிழில் இருந்தால்தான், அது சிறப்பாகவும் ஏற்புடையதாகவும் இருக்கும். ஆனால் மொழியே புரியாமல், பொருளும் புரியாமல், தமிழ் இனத்தவர்களின் திருமணத்தை, வடமொழியான சமற்கிருதத்தில் நடத்தினால், அங்கு குழுமி வந்து திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்த வந்திருக்கும் உறவினர், நண்பர்களுக்கும் அது புரியப் போவதில்லை. மேலும் தொடர்புடைய மணமக்களுக்கே அந்த செத்த மொழி புரியாத போது, திருமணத்தின் நிலையும், பொருளும் என்ன? அத்வைதம், அர்த்தசாஸ்திரம் மற்றும் மனுசாஸ்திரம் எனும் முக்கூட்டுக் கொள்ளைக்காரர்களின் சதியன்று, வேறென்ன?

ஆரியத்தின் இந்த மேலாதிக்க அட்டூழியத்தை நம்மவர்கள், தமிழர்களுக்கே உணர்த்தி விழிப்படைய வைக்க முயன்றால், அவர்களோ தமிழர்களுக்கு இது எதிரானது, கடவுளின் கொள்கைக்கு எதிரானது என தவறான கற்பித்ததிற்கு ஆளாகி, தம் தலையில் தானே கொள்ளி வைத்துக் கொள்வதுபோல, திருமணத்தை வடமொழியான சமற்கிருதத்திலேயே நிகழ்த்தி, தென்மொழியான தமிழ்மொழியை, அவர்களே அப்புறப்படுத்தும் ஒரு இழிநிலை.

தமிழின வரலாற்றிலேயே 1927இல் முதன்முதலாக பதிவு செய்யத்தக்க வேண்டிய, அண்ணல்தங்கோ அவர்கள் தமது திருமணத்தை தாமே தமிழ்மொழியில் நடத்தி, திருக்குறளை முன்மொழிந்து, சிவமணி அம்மாளை புரோகித மறுப்பாக தமிழ்த்திருமணம் செய்துகொண்டார்.

சடங்கு, சம்பிரதாயமின்றி,

புரோகிதம் இல்லாமல்,

அம்மி மிதிக்காமல்,

அருந்ததி பார்க்காமல்

தேவர்கள் பூமழை கூட பொய்யாமல்

 

தமிழ்த் திருமணமாக, வாழ்க்கை துணைவியாக்கிக் கொண்ட நிகழ்வு – தமிழக வரலாற்றில் முதல் புரோகித மறுப்புத் திருமணமாகும். 1927ஆம் ஆண்டு காலக்கட்டதிலேயே கு.மு. அண்ணல்தங்கோ அந்த பெருமைக்குரியவராகிறார்.

நீலன் எனும் கொடுங்கோல வெள்ளையனின், சிலை சென்னை ஸ்பென்சர் கட்டிடம் அருகே நிறுவப்பட்டிருந்தது. அக்கொடியவன், அப்பாவி மக்களை, துப்பாக்கி சூட்டில் பலியாக்கி, பொதுமக்களைச் சித்திரவதை செய்த அயோக்கியன். அவனுக்கு சென்னையில் சிலை நிறுவப்பட்டதை தொடர்ந்து பல உணர்வாளர்கள் எதிர்த்துக் கொண்டு, அச்சிலையை அகற்ற வேண்டும் என்றே வலியுறுத்தினர் ஆனால் வெள்ளைய அரசு தொடர்ந்து அலட்சியம் செய்தே வந்தது.

விடுதலைப் போராட்ட வீரர்கள் சினுவாச வரதன், சோமயாசுலு, சிதம்பரபாரதி, முகமது சாலையா, சுப்புராயலு போன்றோர் அச்சிலையகற்றப் போராடி சிறை சென்றுவிட்டதால், அப்போராட்டம் முழுமையான வெற்றிபெற இயலா நெருக்கடி நிலையில்தான் அண்ணல்தங்கோ அச்சிலையகற்றும் போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்த முன்வந்தார். கர்மவீரர் காமராசர், அண்ணல்தங்கோவின் போராட்டக் குழுவில் ஒரு தொண்டராக இருந்தார் என்பது பதிவு செய்யத்தக்கதாம்.

தொண்டர் படையினையமைத்துத் தலைமை தாங்கிச் சென்ற அண்ணல்தங்கோ, சென்னை ஸ்பென்சர் கட்டிடம் அருகிலேயிருந்த கொடுங்கோலன் நீலன் சிலையினை, உளி, சுத்தி கொண்டு அகற்ற முயன்றார். வெள்ளைய அரசு அவரை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றவாளியாக முன்னிறுத்தியது.

வழக்கை விசாரித்த நீதியரசர் பம்மல் சம்மந்தனார்; அண்ணல்தங்கோவிற்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையை ஒரே காலத்தில் கண்ணனூர் சிறையில் அனுபவிக்க தண்டனை விதித்தார்.

கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்ட அண்ணல்தங்கோ அச்சிறையில் சிறைக் கைதிகள் மறுவாழ்வு நிதிக்காக, எந்த நீதியரசர் சம்மந்தனார் தண்டனை விதித்தாரோ அவரெழுதிய ‘லீலாவதி சுலோசனா’ எனும் நாடகத்தை நடத்தி அந்நாளிலேயே பணம் ரூ. 1750/- அடையச் செய்தார். நாடகத்தில் எவ்வித அரசியலும் கலக்கக் கூடாது என கட்டாய நிபந்தனயை சிறைத்துறை விதித்தும், அதை மீறி அண்ணல்தங்கோ அவர்கள் கதாநாயகனாக நடித்து, விடுதலைப் போராட்டத்தை, வீரர்களைப் புகழ்ந்து பாடியதால், அதிகாரிகளே சற்று அச்சப்பட்டார்களாம்.

கண்ணனூர் சிறையில்தான் ‘தமிழ்மகள் தந்த செய்தி (அ) சிறையில் நான் கண்ட கனவு’ எனும் ஒப்பற்ற தீண்டாமையொழிப்பு, பொதுவுடைமை கருத்துப் பரப்பும் கவிதை நூலினை எழுதினார். பின்னர் பாவேந்தரின் அணிந்துரையுடன் அதை வெளியிடச் செய்தார்.

சைமன் குழுவை எதிர்த்துப் போராடிய அண்ணல்தங்கோவை கைது செய்த வெள்ளைய அரசு, அவரை அரக்கோணம், கடலூர் சிறைகளில் துன்புறுத்தியது. இங்கு கடலூர் சிறையில், பொதுவுடமைப் போராளி ஜமதக்னி அவர்களின் தோழமை கிடைக்கப் பெற்றார்.

உப்பு எடுக்கும் அறப்போராட்டத்தில் அண்ணல்தங்கோ பங்கு அளப்பறியது. 1930-இல் உப்பு எடுக்கும் அறப்போர் தமிழகத்தில் தீவிரமானபோது தமிழகப் போராட்டக் குழுவிற்கு திரு. டி. பிராகசம் தலைவராகவும், அண்ணல்தங்கோ பொதுச் செயலளாரகவும் காங்கிரசுக் கட்சியால் நியமிக்கப்பட்டனர். போராட்டக் களமாக, மயிலாப்பூர் உதயவனம் ஆசிரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, போராட்டம் நடைபெற்றது.

திரு. டி. பிரகாசத்தை வெள்ளைய அரசு கைது செய்தது. அண்ணல்தங்கோ எப்படியோ தப்பித்து, கமுக்கமான இடங்களில் பதுங்கி, போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். டி. பிரகாசம் கைது நடவடிக்கையடுத்து, திரு. கிருட்டிண அய்யர் தலைவராக நியமிக்கப்பாட்டர். திரு.கிருட்டிண அய்யரையும் வெள்ளைய அரசு கைது செய்தது.

திரு. கிருட்டிண அய்யர் கைது செய்யப்படும் போது, அடுத்த தலைவர் அண்ணல்தங்கோ பொறுப்பேற்று செய்வார் என அறிவித்துச் சிறை சென்றார்.

அண்ணல்தங்கோ அவர்களின் பொறுப்பு கூடுதலாகியது. உப்பு எடுக்கும் அறப்போராட்டத்தை பல வீரர்களை இணைத்துத் தீவிரப்படுத்த செயற்திட்டம் வகுத்தார். அப்போது எம் எஸ் எம் தொழிற்சங்கத் தலைவராக இருந்த திரு.வி.வி. கிரி அவர்களை கடற்கரையில் உப்பு காய்ச்சும் ஒரு உபபிரிவின் தலைவராக்கினார்.

மொத்தத்தில், தமிழ்நாட்டில், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் கு.மு. அண்ணல்தங்கோவின் பங்களிப்பு, தமிழ்நாட்டு அளவிலோ, இந்திய உபகண்ட அளவிலோ, பிற போராட்டத் தலைவர்களின் பங்குக்குச் சற்றும் குறைந்தது அல்ல. அண்ணல்தங்கோவின் பங்களிப்பு என்பது பெருமளவில் தேசிய அளவில் ஆய்விட்டு, ஒப்பீடு செய்யத்தக்கதாகும்.

இப்படியாக, தம் வாழ்நாளில் சரிபாதி இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை தண்டனையடைவதுமாயிருந்த கு.மு. அண்ணல்தங்கோவின் வரலாற்றில், காந்தியாரின் குடியேற்ற நகர வருகை ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

தீண்டாமையை ஒழிக்க, காந்தியார் தமிழகம் முழுவது 1934 பிப்ரவரியில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். 1934 பிப்ரவரி 18ஆம் நாள் குடியேற்றம் நகரத்திற்கு வருகை தர அண்ணல்தங்கோ அவர்களிடம் நேரடியாக காங்கிரசு கமிட்டி மூலமாக உறுதியளித்தார்.

அண்ணல்தங்கோ அவர்கள் தாழ்த்தப்பட்டோர் நல நன்கொடைத் திரட்ட, பல தலைவர்கள், அமைப்புகள் என பம்பரமாகச் சுழன்று நன்கொடை திரட்டினார். குடியேற்றம் ஆற்றங்கரையில் பெரிய பந்தலையமைத்து, ஆயிரக்கணக்கான மக்கள்திரளுடன் குழுமியபடி, காந்தியாருக்காகக் காத்திருந்தார்.

குடியேற்றம் நகரம் வருகை புரிந்த காந்தியார், அண்ணல்தங்கோ அளித்த நன்கொடை முடிச்சை மட்டும் பெற்றுக் கொண்டு, மேடையில் ஏதும் பேசாமல் கிளம்பி ஆம்பூர் சென்றுவிட்டார். பேசுவதற்கு வாக்குறுதி அளிக்காத ஆம்பூரில், பேசிவிட்டுச் சென்றார். ஆனால் பேசுவதாக உறுதியளித்த காந்தியார், குடியேற்றத்தில் மட்டும் ராஜாஜி மற்றும் டி.எஸ்.எஸ் இராஜன் சூழ்ச்சியால் பேசாமலேயே சென்றுவிட்டார். குடியேற்றமாற்றங்கரையில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை, பேசாமலேயே ஏமாற்றி, தன்னை ‘பார்ப்பனர்களின் கையாள்’ என காட்டிக் கொண்டார்.

காந்தியாரின் அத்தகாத்தீச் செயலைக் கண்டுக் கொதித்தெழுந்த அண்ணல்தங்கோ, அதுநாள் வரை காங்கிரசு இயக்கத்தில் தான் செய்த அனைத்துத் தியாகங்களையும் துச்சமெனக் கருதி, காங்கிரசு எனும் அத்தீயோர் பேரவையிலிருந்து உடனே விலகினார்.

மேற்படி நாம் எழுதிய அனைத்திற்கான சான்றாதாரங்கள்:

 

  1. தமிழர் திருமணமும் இனமானமும் – பேரசிரியர் க. அன்பழகன்
  2. காங்கிரசு இயக்க நூற்றாண்டு விழா மலர் – தொகுப்பு வேலூர் வே.கி. குப்புசாமி
  3. Who is who freedom fighters volume II – தமிழக அரசு வெளியீடு
  4. The Statue of Discontent The Hindu Newspaper 1987 Sept 4th
  5. Neil Statue – a Document Series Egmore Archaeological Centre
  6. ‘சுதந்திரப் போரில் தியாக மலர்’ மாலை முரசு நாளிதழிதற்கு அண்ணல் தங்கோ அளித்த 3 நாள் நேரடிப் பேட்டி
  7. விடுதலைப் போரில் தமிழகம் – ம.பொ.சி