பெயர் மாற்றப் பிதா கு.மு. அண்ணல்தங்கோ

1916 ஆண்டில் ‘வேதாசலம்’ அவர்கள், வடமொழி பெயரை அகற்றி தூயதமிழில் ‘மறைமலை அடிகள்’ என மாற்றிக் கொண்டு, தனித்தமிழ் இயக்கம் கண்டு, பெரு வெற்றியடைந்திருந்தாலும் வடமொழிப் பெயர்களை அகற்றி, தூய தனித்தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதில் கு.மு. அண்ணதங்கோதான் முன்னோடியாக இருந்து செயற்பட்டார் என்பதை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியது. ஓவ்வொரு தமிழனின் கடமையாகும் எனில் அது மிகையாகது.

 

முதலில் ‘சுவாமிநாதன்’ என தம் பெற்றோரிட்ட வடமொழிப்பெயரை அகற்றி, தூய தனித்தமிழிலானா ‘அண்ணல்தங்கோ’ என தம்முடைய பெயரை மட்டும் தனித்தமிழில் மாற்றியமைத்துக் கொள்ளாமல், தாம் சந்திக்கும் அனைத்து அறிஞர் பெருமக்களனைவரின் பிறமொழிப் பெயர்களையகற்றி தூயத்தமிழில் பெயரிடுவதை தமிழ்த்தேசியக் கடமையாகவே தம் வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தார் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் நம் கண்முன்னே பல நூல்களாக நிறைந்து கிடக்கின்றன.

 

வேலூர் மணியம்மை வீட்டில் 15 ஆண்டுகளுக்கு மேல் வாடகைக்குக் குடியிருந்த அண்ணல்தங்கோ, மணியம்மையின் பெற்றோரிட்ட பெயரான ‘காந்திமதி’ எனும் பிறமொழிப் பெயரை அகற்றி ‘அரசியல் மணி’ என தூய தமிழ்ப் பெயர் சூட்டினார்.

 

பெரியாரை மணந்துகொண்ட பின்னர், அவர் பெயரின் முன்பிருந்த அரசியல் போக, மணியுடன் மதிப்புக் காரணமாக அம்மை இணைந்து ‘மணியம்மையார்’ ஆயிற்று.

 

காண்க : சுயமரியாதை சுடரொளிகள் நூல் தொகுப்பு : இறையன்

பெரியார் சுயமரியாதை பிரச்சார வெளியீடு

 

‘தமிழ்நிலம்’ வார இதழில் தமிழுணர்வு காரணமாக பணியாற்ற வந்த, சி.பி. சின்ராஜ் அவர்களை ‘சி.பி. சிற்றரசு’ என தமிழ்ப்பெயராக மாற்றியமைத்து ‘தமிழ்நில இதழிலே’ வேலை வாய்ப்பளித்தார் அண்ணல்தங்கோ.

 

காண்க : சி.பி. சிற்றரசு வரலாறு இணையதளம்

 

அரங்கசாமி எனும் பெயரை ‘அரங்கண்ணல்’ எனப் பெயரைச் சூட்டினார் அண்ணல்தங்கோ. ஆனால் அரங்கண்ணல் அவர்களே தன் வரலாற்று நூலில் பெயர் மாற்றப் பிதா அண்ணல்தங்கோவின் அனுமதியுடன், அரங்கசாமி என பெயரை ‘அரங்கண்ணல்’ என மாற்றிக் கொண்டேன் . நாவலர் வேங்கிட சாமி நாட்டார் அய்யாதான் அண்ணல்தங்கோவை அரங்கண்ணல் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

 

காண்க : ‘நினைவுகள்’ அரங்கண்ணல் தன் வரலாறு

நக்கீரன் பதிப்பகம், பக்கங்கள் : 19 & 20

 

தார்பிடோ ஜனார்த்தனன் அவர்களின் பெயரை தூய தனித்தமிழில் ‘மன்பதைக்கன்பன்’ என மாற்றியமைத்தார்.

 

காண்க : ‘பெரியாரே என் தலைவர்’

ஆசிரியர் டார்பிடோ ஜனார்த்தனம்

 

கு.மு. அ. குடும்பத்திற்கு எழுதிய கடிதம்

 

தாம் நடத்தும் உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவையின் நிகழ்ச்சி அழைப்பிதழில், அறிஞர் பெறுமக்களின் பெயர்களைத்  தனித்தமிழ் பெயராக மாற்றிக்  குறிப்பிட்டுவிட்டு, அவர்களின் நடைமுறை பெயர்ளை அடைப்புக் குறியில் குறிப்பிடுவார்.

 

அருளின்பக்கடலார் – கிருபானந்த வாரியார் 

வெண்குழற்கோமான் – மே.வீ. வேணுகோபாற் பிள்ளை

கி.ஆ.பெ. நெடுந்துறைகோ – கி.ஆ.பி.விசுவநாதம்

கரிய குழலியார்  – கிருட்டிண வேணி அம்மையார்

உயிரின்பன் – ஜீவானந்தம்

புலவர் கூத்தரசனார் – புலவர். நடராசனார்.

பி. இளந்தூயமணி – பி. பாலசுப்ரமணியம் (சண்டே அப்சர்வர்)

சி.பா. பகலவன் – சி.பா. ஆதித்தனார்.

திருக்குறள் . முனியண்ணல் – திருக்குறள் முனுசாமி

ம. இறைமணிச்செல்வர் – ம. இராசமாணிக்கனார்.

நாவலர் ச.கோ. நிலவழகனார் – நாவலர் ச.கோ. சோமசுந்தர பாரதியார்.

கர்மவீரர் காரழகனார் – கர்மவீரர் காமராசர்

அறச்செல்வியார் – தருமாம்பாள்

இளமுருகு பொற்செல்வி – இளமுருகு தனபாக்கியம்

 

( அண்ணல்தங்கோவே ‘தனபாக்கியம்’ எனும் பிறமொழிப்பெயரை அகற்றி, தமிழில் ‘பொற்செல்வி’ என சூட்டியதை இக்கட்டுரை ஆசிரியரிடம் தம் கைப்பட கடதம் எழுதி கொடுத்துள்ளார் )

 

இப்போது வேலூரில் தமிழியக்கம் நடத்தி தன்மான வீரராக களத்தில் செயல்பட்டுவரும் ‘செந்தமிழ்க்கோ’ அவர்களின் இயற்பெயர் ‘இராமகிருட்டிணன்’ ஆகும். அண்ணல்தங்கோ அவர்கள்தாம் அந்த ஆரியமொழிப் பெயரையகற்றி, தூயதமிழில் ‘செந்தமிழ்க்கோ’ என பெயர் மாற்றம் செய்தார்.

 

வேலூரில் லட்சுமி சரசுவதி பேருந்து நிறுவன உரிமையாளரும் பாவாணரின் உற்ற தோழரான ‘செகநாதன்’ அவர்களின் சமற்கிருத பெயரை நீக்கி ‘உலகண்ணல்’ என மாற்றம் செய்தார்.

அனைத்துக்கும் மேலாக, முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரையே ‘அருட்செல்வன்’ என அண்ணல்தங்கோ மாற்றியமைத்தார். இதுகுறித்து கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலியில் முதல் பக்கம் 13-09-2014 நாளன்று ஒரு திருமண நிகழ்வில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:

 

திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் தனக்கு தங்கள் பெற்றோரிட்டப் பெயரை, உற்றார் உறவினர்கள் சூட்டிய பெயரை, அதிலே தமிழ் உணர்வு இல்லை. தமிழர்களுடைய இன, மான உணர்வு இல்லை. பகுத்தறிவு உணர்வு இல்லை என்ற காரணத்தினால். தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டனர். என் பெயர் கருணாநிதி என்னதான் உணர்விருந்தாலும், நானே சொல்லக் கொள்கிறேன். அது ஒரு வடமொழிப் பெயராக இருந்தக் காரணத்தால், திராவிட இயக்கம் தோன்றிய போது, திராவிட இயக்கத்திலே தமிழ்ப்பெயர்களை தாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் விரும்பப்பட்ட குடியாத்தம் அண்ணல்தங்கோ போன்றவர்கள் என்னைச் சந்தித்தபோதும், எனக்கு மடல்கள் எழுதும் போதும் என் பெயரை ’அருட்செல்வர்’ என மாற்றிக் கொள்ள வேண்டுமென்று சொன்னார்கள்.

 

அண்ணாவிடம் கேட்டேன் பெயரை மாற்றிக் கொள்ளச் சொல்லி அண்ணல்தங்கோ எழுதியிருக்கிறாரே அண்ணா, என்ன செய்து என்றேன். அண்ணா சொன்னார் இந்தப் பெயர் ஏற்கனவே பழகிவிட்டது. எல்லோருக்கும் தெரிந்த பெயராகி விட்டது. என கூறியதால்தான் நான் கருணாநிதியாக உள்ளேனே யன்றி, மற்றபடி அண்ணல்தங்கோ வின் ‘அருட்செல்வமாகத்தான்’ உலவியிருக்க முடியும் என அண்ணல்தங்கோவின் வடமொழிப் பெயரை மாற்றி தமிழ்ப்பெயர் சூட்டும் புரட்சியைச் சான்றாகவேக் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலே, நெடுகினில் நாம் தனித்தமிழ் இயக்கத்தை ஆய்விடும் போது, அரங்கண்ணல் அவர்கள் தன் வரலாற்று ‘நினைவுகள்’ நூல் பக்க எண்: 19 & 20இல் குறிப்பிட்டுள்ளது போல் அண்ணல்தங்கோ ஒரு பெயர் மாற்றப் பிதா ஆவார் என்பதை அனைத்து ஆய்வாளர்களும், அறிஞர்களும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.