திராவிடர் கழகத்திற்கு ‘தமிழர் கழகம்’ எனப் பெயரிடப் போராட்டம்

1944ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ மாநாட்டில், அக்கட்சியின் பெயரை ‘திராவிடர் கழகம்’ என பெரியாரும், அண்ணாவும் மாற்றினார்கள். அம்மாநாட்டில் கலந்து கொண்ட கு.மு. அண்ணல்தங்கோ, சுவுந்தரபாண்டியன், சண்டே அப்சர்வர் பி. பாலசுப்ரமணியம் மற்றும் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றோர்க்கு அதில் சற்றும் உடன்பாடில்லை.

 

1944ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வுக்கு முன்னரே 1940இல் திருவாரூரில் தென்னிந்திய சங்க உரிமை மாநாடு நடந்தது. அதில் 1941இல் நடக்கவிருக்கும் குடிமதிப்புக் கணக்கெடுப்பின் போது, ‘தென்னாட்டு மக்கள் தம்மைத் தமிழர் எனவும், தமிழக மக்கள் எனவும்’ குறித்துக் கொள்ள வேண்டுமென்ற தீர்மானத்தை கொண்டு வர முயன்றார் அண்ணல்தங்கோ பின்வருமாறு:

 

சென்ற கி.பி. 1949ஆம் ஆண்டிலேயே தமிழர் குடி இயல் கணக்கைத் திருத்த முயன்று அவ்வாண்டில் திருவாரூரில் தமிழர் நன்றிக்குரிய தமிழ்த் திரு. ஈ.வே.இராப் பெரியார் தலைமையில் நடந்த தென் இந்திய நல உரிமைப் பேரவை மாநாட்டுக்கு (To The Justice Conference of the S.I.L.F. which was held under the Presidentship of Periyar E.V.R. at Tiruvarur in Tanjore District Tamilnad in the year 1940) ஒரு தீர்மானத்தைச் செலுத்தினன். அதன் சொல் வருமாறு : கி.பி. 1941ஆம் ஆண்டில் நடைபெறும் இந்தியக் குடிஇயல் கணக்கெடுப்பில், (1941 Census) தென்னகத்தில் வாழும் தமிழ் மக்கள் (தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், துளுவர், கொங்கணர், ஒரியர், மராட்டியர், குசராத்தியர்) தங்களைத் தமிழ்மக்கள் என்றும்; தமிழ்நாட்டினர் தம்மை தமிழர் என்றும் குறித்துப் பதிவு செய்து கொள்ளல் வேண்டும் என இத்தென் இந்திய மக்கள்நலப் பேரவை மாநாடு தீர்மானிக்கிறது! என்பதாகும். அதனைப் பொருள் ஆய்வுக் குழுவில் (Subjects Committee of the Conference) கொண்டு வராமலும் எனக்கு அறிவிக்காமலும், பெரியாரும், நண்பர் அண்ணாதுரையும் தம்முட்கலந்து பேசி முடிவு செய்தவாறு “திராவிடர்” என்று பதிவு செய்துகொள்ளல் வேண்டும் என்று திருத்திவிட்டுப் பொது மாநாட்டில் (In the open conferece) அத்தீர்மானத்தை என்னை வேண்டுதல் செய்யுமாறு திடீரெனப் பணித்தனர். யான் திடுக்குற்றுத் தெளிந்து நேரமின்மையால் மாறுபடாமல் சிறிது ஒட்டியவாறு தெலுங்கர், கன்னட, மலையாளிகள், துளுவர், கொங்கணர் முதலியோர் வேண்டுமாயின் எங்ஙன மாயினும் குறித்துக் கொள்ளட்டும்; தமிழ்நாட்டுத் தமிழர் அனைவரும் தம்மை தமிழர் என்றே குறிக்க வேண்டும் என்று ஒரு சிலவே சொல்லி மீண்டனன். இது நல்லதோ அல்லதோ தமிழ்நாடு நன்கறியும் சென்றது செல்க.

 

இனி இவ் ஆங்கில (1961ஆம்) ஆண்டு பிப்ரவரித் திங்கள் 11 ஆம் நாள் தொடங்கி மார்ச்சுத் திங்கள் முதற் கிழமை வரை எடுக்கப்போகும் மக்கள் குடிஇயல் (1961 Census) கணக்கு எடுப்பின்போது எவர்க்கும், எதற்கும், யாதும், சிறிதும், அஞ்சாமல் – தளராமல் நெஞ்சுத் துணிவுடன் தமிழராய் பிறந்துள்ள தமிழர் – தமிழ் மக்கள் அனைவரும் தம்மைத் தமிழர் என்றும், தம் சமயம் திருக்குறள் அறம் என்றும், தமது கடவுள் திருவள்ளுவர் உணர்த்தும் அன்புருவாகிய ஒரே கடவுள் என்றும் தமக்கும், ஆரியத்தும் – இந்து சமயத்துக்கும், பகத்கீதை – வேதம் முதலியவற்றுக்கும் யாதும் தொடர்பு இல்லை என்றும் குறிக்குமாறு செய்தல் வேண்டும்!

இங்ஙனம் குறித்துக் கொண்டாரா என்றும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளல் வேண்டும்! என்று இவ்வேண்டுதலை உலகப்புலவர்தங்கோ திருவள்ளுவப் பெருமானைத் தலைவராக கொண்டுள்ள உலகத் தமிழ்மக்கள் தற்காப்புப் பேரவையின் சார்பிலே உலகத் தமிழர்களுக்குக் குறிப்பாகத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு பேரவையின் கட்டளையாகவும், பொது தனி வேண்டுகோளாகவும், பொங்கல் புத்தாண்டு பெருநாளில் இப்புத்துணர்வு வாழ்த்துரையைத் தமிழினத்துக்கே – தமிழ்மக்களுக்கே ஒரு தனிப் பெருமையைத் தேடி வைத்துள்ள தமிழ்நிலப் புலவர் கோமான் நல்லாண்மைத் தமிழ்மகனார் நக்கீரப் பெருமானது திருப் பெயராலும் இவ்வேண்டுதல் பொங்கல் வாழ்த்துரையைச் சாலப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ளுகின்றனன் – என்று குறிப்பிட்டுள்ளார்.