சிறுவயது

அண்ணல்தங்கோ ஏழாவது அகவையிலேயே அவர்தம் தந்தையார் காலமாகிவிட்டதால், அவரின் குடும்பம் வறுமையில் வாடியது. அவரின் அன்னை, அவரை உயர்ந்த நிலைக்கு ஆளாக்க வேண்டுமென இலட்சியத்தோடு வளர்த்தார். சந்தையில் காய்கறி, கீரை கடை வைத்து, அதில் வரும் வருவாயில் குடும்பம் நடத்த வேண்டிய நெருக்கடி நிலை. இதனால் அண்ணல்தங்கோ முறையாக பள்ளிசென்று கல்வி கற்கும் வாய்ப்பை அறவேயிழ்ந்தார். இதனை அவாது மணிவிழா மலரில் குறிப்பிடும் போது, ‘எனதருமைத் தந்தையார் நோய்வாய்ப்பட்டு – மூன்றாண்டு கிடந்து இறந்துவிட்டார். எனவே எனது கல்விச்செல்வம் (கல்விகற்கும் வாய்ப்பு) அகர முதல் னகர ஒற்றீராகியது’- என தான் பள்ளிக்குச் சென்று கல்வி பயிலவில்லையே என வருத்தமாகக் கூறுகிறார்.

பள்ளிசென்று கற்கும் வாய்ப்பு கிட்டாவிடினும், இளமைக்காலந்தொட்டே, தம் முயற்சியினால் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் சமற்கிருதம் மொழிகளில் புலமைபெறுமளவிற்குத் திகழ்ந்தார்.

குடும்ப வறுமையின் காரணமாக, அவர் நெசவுத்தொழிலில் நன்கு கைதேர்ந்தவராதல், நெசவுத்தொழில் செய்து குடும்பத்தில் இரு சகோதரர்களையும் படிக்க வைக்கலாம் எனும் நோக்கில், அவர் கண்டவிராயன்பட்டியிலிருந்து கைத்தறி தொழிலில் முன்னணி நகரமான குடியேற்றத்திற்கு குடிபெயர்ந்தார்.

அதனாலேயே ‘குடியேற்றம்’ எனும் ஊர் பெயர் முதலெழுத்தான ‘கு’ வை இணைத்து ‘கு.மு. அண்ணல்தங்கோ’ எனக் குறிப்பிட்டுப் பேசி பழகி வந்ததால், அவர் அப்பெயரிலேயே அழைக்கபடலானார்.

 

அண்ணல்தங்கோவுடன் நடேசன், இராமசந்திரன், பெருமாள் என்ற 3 தம்பிகளும், அரங்கநாயகி எனும் தங்கையும் பிறந்தார்கள்.

இளமைப்பருவம் முதலே அண்ணல்தங்கோ தமிழின உணர்வாளராகவும் நாட்டுப் பற்றுமிக்கவராகவும் பொதுநலப்பணி உணர்வினராகவும் செயற்பட்டார்.