கு.மு. அண்ணல்தங்கோ எழுதிய நூல்கள்

 

  1. அறிவுப்பா (அ) என் உள்ளக் கிழவி சொல்லிய சொல்
  2. தமிழ்மகள் தந்த செய்தி (அ) சிறையில் யான் கண்ட கனவு
  3. அண்ணல் முத்தம்மாள் பாட்டு (தமிழர் எழுச்சிக்கான
  4. தீண்டாமையை எதிர்த்து போர் முரசுப் பாடல்)
  5. மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா?
  6. நூற்றுக்கு நூறு வெற்றிக் காங்கிரசு வெற்றித் தமிழ்மறவர்
  7. தேர்தல் போர் முரசுப் பாடல்கள்
  8. முருகன் தந்த தேன் கனிகள்

 

அறிவுப்பா நூல் முழுவதும் பொதுவுடமை கருத்து தாங்கி, அடுத்த தலைமுறை அறிவியலை அடிப்படையாகக் கொண்டு பயணிக்க வேண்டுமென வலியுறுத்தி எழுதினார்.

 

‘தமிழ் மகள் தந்த செய்தி (அ) சிறையில் யான் கண்ட கனவு’ நூலை, நீலன் சிலை  தகர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு கண்ணனூர் சிறையில் 1 ஆண்டு இருந்த போது எழுதினார். இந்நூலிற்கு பாவேந்தர் பாரதிதாசன் அணிந்துரை நல்கியுள்ளார்.

 

தீண்டாமையை அகற்ற, மேல் சாதி –  கீழ்சாதி என வர்ணாசிரமம் வலியுறுத்தும் அபாண்ட தீமையை அகற்ற, தமிழர்கலள் விழிப்புணர்வு பெற வேண்டும். தீண்டாமையை ஒழிக்காமல், தனி தன்னுரிமை நாடு பெறுவது, வெற்று வீண் வேலையென வலியுறுத்தி, தீண்டாமை நோயை அகற்றிட, அதை பெருநோக்காகக் கொண்டு அண்ணல்தங்கோ எழுதிய பாடல் நூலிது.

 

அந்நூலில் தீண்டாமைக் கெதிராக,

நீசர் தம்மைத் திருந்திடல் வேண்டும்!

நேர்மையற்ற கொடும் மாக்கள்!

பேசுந் ‘தீண்டாமை’ போக்கிடல் வேண்டும்!

பேதமைச் சாதிப் பித்தறல் வேண்டும்!

மாசு நெஞ்சர் ‘மறை! மதம்’ வேண்டாம்!

‘மதப்’பெயர் கொண்டு சண்டை புரிந்து

மாயுமக்களை மீட்டிடல் வேண்டும்!

 

என தீண்டாமைக் கெதிராக அணிதிரள அழைக்கிறார்

முத்தம்மாள் பாடல் நூலில்,

 

‘ஆண்டவர்’ பெயருரைத்தே! – தினமும் பல்

லாயிரம் குடப்பாலைக் கல் மண்ணிலூற்றுவார்!

மாண்டுவிடுங் குழந்தைகளுக்கோ! – பெற்ற

மாதா தரும் பாலும் மற்றைப் பாலுமின்றியே!

ஆண்டுக் கணக்காய் பட்டினி! – கிடந்து

அவதிப் பட்டுயிர் உடையுணவு! – உடைய

வீணர்களுக்கே கொடுத்து வீழ்ந்து பணிவார்!

மாண்டவர் பெயரைச் சொல்லி – பகலில்!

மக்களை ஏய்ப்பவருக்கே கொட்டிக் கொடுப்பார்!

ஈண்டு பல மக்கள் உழைத்து! – வகுத்த

இரண்டொடுவர் பயனைத் துய்த்து மகிழ்வார்!

‘தீண்டாமை’ செப்பித் திரிவார்! – அவர்கள்

‘தீண்டும்’ பொருள் யாவற்றையும் உண்டு களிப்பார்!

ஆண்டவன் ஒருவணுண்டேல்! இந்த

அடாத செயல்களும் தடைபெறுமோ!

 

என தீண்டாமைக் கெதிராக கொதித்தெழுந்து கேள்வியெழுப்புகிறார்.

 

பாப்பனர்களின் ஏகாதிபத்திய இந்திய தேசியத்தை,

 

நஞ்சினும் கொடிய நஞ்சாம் பார்ப்பனர்

நயவஞ்சகர் சொற்களின் – தனி

நாக்கு வஞ்சந்தனை நன்கு அறிந்தவர்

நம்புவாரோ ‘தேசீயம்!’ – எனவும்

அரிய மானிடரே ‘தீண்டப்படா’ தென

ஆரிய நூல்காட்டி – சாதிப்

பிரிவை நாட்டினுள் நிலை நிருத்துவோரைப்

பின்பற்றிக் கிடப்பாரோ!

 

என தீண்டாமைக்கெதிராகாகவும் சீறுகிறார்.

 

ஆரியப் பார்ப்பனியக் கொடுமையை

 

‘மதம், பக்தி யாகங் கோயில் தெய்வங்கள்’ காட்டி

மக்கள் முன்னேற விடா மடமையிலாட்டி

‘இதத்தரும் சொர்க்கம் மோட்சம்’ என நஞ்சை யூட்டி

ஏமாற்றும் இக்கதைகள் ஆரியர் சூழ்ச்சி!

 

மத்திய ஆசியா விலிருந்து வந்தார்கள்!

மக்களெல்லா மொன்றென்னும் மதியே இல்லார்கள்

‘புத்தி தமக்கே’ யென்றும் பறையடிப்பார்கள்!

‘பூதேவர் தாங்க’ளென்று உள் நுழைந்தார்கள்!

 

பன்னெடு நாட்களாய் பாரதநாடு

படுத்துய ராரியரால் பாவிய கேடு!

மன்னர் தமிழரெல்லாம் மறுத்திட்டபோது

‘மனுஸ்மிருதி’ வேத மென்று போட்டனர் சூடு!

 

கையினில் யொதொரு ஆயுத மின்றி!

கற்று நால்வித படையுமொன்றின்றி!

‘ஐய’ரென்றே தர்ப்பைப் புல்தன்னைக் கொண்டு!

அறிவுள் மனிதரை ஆள்வது! நன்று!

 

கோடி கோடியாய் நம் செல்வமும் போச்சு!

கோழைகளாய் நம் ‘வாழ்’வு மாச்சு!

ஆடம்பரப் பார்ப்பன மக்களைப் போற்றி

அடிமையாய் ‘வாழ்வது’ மிக மிகத் தாழ்ச்சி!

 

கோயில் கடவுள் பேரால் பொருள்களை இழந்தோம்!

குழந்தைகளுக்குக் கல்வி கொடுப்பதை மறந்தோம்!

ஆய்ந்து பாராமலே நம்முடன் பிறந்த!

ஆருயிர் தமிழரை! தீண்டாமற் பிரிந்தோம்!

 

என கேள்விகேட்டு தட்டியெழுப்புகிறார்.

 

தமிழின் தொன்மையை,இந்தி எதிர்ப்புப் போரின் போது குறிப்பிடுகையில்

 

‘நேற்று பிறந்த மொழி! – முத்தம்மா!

நீட்டி அளக்குதடி!

ஆற்றல் நிறைந்த தமிழ்! – முத்தம்மா!

ஆட்டங் கொடுக்குதடி’

 

தமிழை கெடுக்க ஒரு கூட்டம்!

தவம் யாகம் செய்கின்றக் கூட்டம்!

அமையாதவர்க ளெண்ண ஓட்டம்!

அடைய அவர்தங் கருத்தொழிக!

தேசீய மொழி! இந்தி யெனவே

செப்பித் திரிவதெல்லாம் புளுகே!

ஆசை தமிழை யகற்றிடவே!

அறிவீர் தமிழர்களே முனமே!!

 

என அண்ணல் முத்தம்மாள் பாடல் நூல் முழுக்க நெடுகிக் கேட்டுக் கொண்டே செல்கிறார்.

 

‘மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா?’ என்ற நூல், அன்றை ஆசிய கண்டத்தின் மொத்த வரலாற்றையே விளக்கிக் கூறும் விதத்தில்  எழுதியிருந்தார்.

 

ஓவ்வொரு அதிகாரத்தில் இந்திய உபகண்டத்தில் ஆதிக்கம் செய்யும் அற்றிய, ஆரிய சக்திகளைத் தோலுரித்து, அவ்வதிகார இந்தியில் கேள்வி கேட்கும் பாணியில், தனித்தமிழ் நடையில், எவ்வித ஆரியச் சொல் கலக்காமல் எழுதியிருந்தார்.

 

‘நூற்றுக்கு நூறு வெற்றிக் காங்கிரசு வெற்றித் தமிழ் மறவன் போர் முரசுப் பாடல்கள்’ நூலினை, கர்மவீரர் காமராசர் குடியேற்றம் தொதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது, காமராசரே அண்ணல்தங்கோ வீட்டிற்கு நேரடியாக வந்து ஆதரவு கேட்டமைக்கு, அவரை அந்த இடைத்தேர்தலில் வெற்றிபெறச் செய்ய எழுதிய நூல்தான் அப்பாடல் தொகுப்பு நூல். நூற்றுக்கு நூறு காங்கிரசு வெற்றிப்படைப்பாட்டு.

 

‘முருகன் தமிழ் தேன் கனிகள்’ நூல் முழுக்க முழுக்க ஆரிய வழிப்பாட்டையெதிர்த்து, வடமொழியான சமற்கிருத மொழி அர்ச்சனை மொழியாக திணிக்கப்படுவதற்கெதிரான, சைவ சமய கடவுளான ‘முருக’ வழிபாட்டை ஆதரித்து, தமிழே கோயில் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டுமென அண்ணல்தங்கோ யாத்த நூலாகும்.