உலகத் தமிழ்மக்கள் தற்காப்புப் பேரவை துவக்கம்

காங்கிரசுப் பேரவையில் நீடித்திருந்தால், தாமும், தம் தமிழ்நாடும் உருபடவே முடியாது. பார்ப்பன வளர்ச்சிக் கழகமான காங்கிரசு ஒரு ஏகாதிபத்திய மதசார்புடைய அமைப்பு என தெளிந்தார்.

தமிழினம் விழிப்புணர்வடைய தமிழ்மொழி நம்மை ஆள, தமிழ்நாடு – நம் சொந்த தாய்நாடாக மாற “உலகத் தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவை” எனும் அமைப்பை நிறுவினார்.

உ.த.ம.த. பேரவை மூலமாக, ஒவ்வொராண்டும் தமிழர் திருநாளான தைத்திங்கள் பொங்கல் நாளினை, தமிழக முழுவதிலிருந்து பல தமிழறிஞர்களை, போராளிகளை, தன் மானப் போராட்டக்கார்களை வேலூர் நகரத்திற்கு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அனைவரும் விழிப்புணர்வு பெறச் செய்தார்.

அவர் உருவாக்கிய ‘உலகத் தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவை’ மூலம், அவர் தொடர்ந்து விடாமல் தமிழ் இன, மொழி, நாட்டு – ஆக்கப் பணிகளில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயலாற்றியதுதான் ‘தனித்தமிழ் இயக்க முன்னோடி கு.மு. அண்ணல்தங்கோ’ என நாம் இங்கே விளக்கமாக காண உள்ளோம்.

 

உலகத் தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவையின் இன்றியமையா நோக்கங்களில் தலையாயன

 1. தமிழர் திருநாளான தைத்திங்கள் பொங்கல் திருநாளன்று, வேலூரில் தொடர் கூட்டம் நடத்தி மக்களிடையே தமிழின, மொழி, நாட்டுப்பற்றுதலை ஊட்டி வழிப்புணர்வு அடையச் செய்தல்.
 2. எவ்வித பிறமொழிக் கலப்பின்றி, தூயத் தமிழ் சொற்களையே பேசும் போதும், எழுதும் போதும் பயன்படுத்த வேண்டும்.
 3. தமிழர்களின் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும்போது, வடமொழி, பிறமொழிப் பெயர்களை அறவே தவிர்த்து தூய தமிழ்ப் பெயர்களை, இனிய அழகானத் தமிழ்ப் பெயர்களையேச் சூட்ட வேண்டும்.
 4. ஒருவேளை, ஏற்கனவே தமிழ்ப் பெரியவர்கள் தங்கள் பெயர் வடமொழிப் பெயர்களாயிருப்பேன், அதைத் தூய, அழகிய தமிழ்ப்பெயராக உடனே மாற்றியமைத்து, தமிழக அரசு இதழில் பதிவிட வேண்டும்.
 5. வணிக மனைகள் அனைத்திலும் முதலில் பெரிய எழுத்துகளில் தமிழிலேயே அமைக்கப்பட்டு, பிறமொழி எழுத்தை அதன் கீழேக் குறிப்பிடலாம் என வலியுறுத்திப் போராட வேண்டும்.
 6. தீண்டாமையை எதிர்த்து, ஒவ்வொரு தமிழனும் போராட முன்வர வேண்டும்.
 7. திருக்குறள் நூலினை தேசிய நூலாக அறிவிக்கச் செய்ய வேண்டும்.
 8. உலகிலுள்ள ஒவ்வொரினமும், அவ்வினம் பேசும் மொழி வழியிலேயே அழைக்கப்படுவதும், ஆராய்ச்சி செய்யப்படுவதும் இயல்பு அல்லது வழக்கம். அதே போல் தமிழ் இனமும் தாம் பேசும் மொழியடிப்படையில், தமிழினம், தமிழ்நாடு, தமிழ்மொழி என அழைக்கப்பட வேண்டுமேயொழிய, வரலாற்றைத் தவறாக திசைதிருப்பும் நோக்கில், திராவிட இனம், திராவிட நாடு, திராவிட மொழி என பொருந்தாமல் அழைக்கப்படக் கூடாது.
 9. உலகத் தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவையின் அதிகாரபூர்வ வார இதழான ‘தமிழ்நிலம்’ எனும் தனித்தமிழிலான, அயற்மொழிக் கலப்பற்ற வார இதழினை ஒவ்வொரு தமிழ்மகனும், தமிழ்மகளும் வாங்கிப் படித்துப் பயனுற்று, பிறரையும் விழிப்புணர்வடைய ஊக்கப்படுத்த வேண்டும்.
 10. கோயில்களில் வழிப்பாட்டு மொழியாக ஆரியரால் புகுத்தப்பட்டுள்ள சமற்கிருதத்தை அகற்றி, அவ்விடத்தில் தமிழ் வழிபாட்டு மொழியாக சட்டமியற்றப்பட வேண்டும்.
 • மேற்குறிப்பிட்டாற் போலேவே, கு.மு. அண்ணல்தங்கோ தம் இயக்கத்தையும் ‘தமிழ்நிலம்’ வார இதழினையும் விடாமல் நடத்தினார். தமிழ்நிலம் வார இதழினில் பல தமிழறிஞர்களின் அரிய ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டுவந்தார்.