இதழும் பாராட்டும்

‘தமிழ்நிலம்’ வார இதழில், பாவேந்தர் பாரதிதாசன், மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர், அ.கி. பரந்தாமனார், நா.ர. முருகவேள், தார்பிடோ சனார்த்தனன், சி.பி. சிற்றரசு, மே.வீ. வேணுகோபாற்பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம், குளித்தலை பொற்செல்வி, இளமுருகு, மயிலை சிவமுத்து, வெள்ளை வாரணனார், முனைவர் அ. சிதம்பரநாதனார் முனைவர் மா. இராசமாணிக்கனார், வாணியம்பாடி விசுவநாதன் போன்ற அறிஞர்கள், உணர்வாளர்களின் அரிய ஆய்வும் கட்டுரைகள் மூலம் வெளிவரச் செய்தார்.

 

‘தமிழ்நில’த்தில் தமிழினம் சார்ந்த தரமான ஆய்வுக் கட்டுரைகள், தீண்டாமைக்கெதிரான விழிப்புணர்வு தாங்கிய கட்டுரைகள், கதைகள், தமிழ்நாடு தனியே பிரிய வேண்டி வலியுறுத்தும் ஆய்வுக்கட்டுரைகள், பெறுவாழ்வில் பெண்களின் பங்களிப்பு குறித்த கட்டுரைகள், இந்தி எதிர்ப்புப் போர் குறித்த ஆழ்ந்த ஆய்வுக் கட்டுரைகள், அனைத்துலக நாடுகளின் வரலாறும், இந்திய, ஆரிய தேசியத்தின் ஏகாதிபத்தியத்தைத் தோலுரித்துக் காட்டும் கட்டுரைகளும் இடம்பெறச் செய்தார் அண்ணல்தங்கோ.

 

இத்தமிழ்நிலம் இதழ் சார்ந்த ஒரு நிகழ்வை இங்கு பகிர்வது சிறப்பு.

 

1950 ஆம் ஆண்டு வேலூரில் கு.மு. அண்ணல்தங்கோ ‘தமிழர் திருநாள் விழாவினை’ வெகுசிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

அண்ணல்தங்கோவின் வேலூர் சார்பனா மேட்டுத் தெரு வீட்டில் தமிழறிஞர்கள் அனைவரும் தங்கியிருந்தனர்.

 

அப்போது பேச்சுவாக்கில் மயிலை சிவமுத்து அவர்கள், கடல், கடல்சார்ந்த நெய்தல் நிலம்தான் தமக்கு மிகவும் பிடித்தம் எனக் கூறினார்.

 

தஞ்சையின் நீ. கந்தசாமிப்பிள்ளை தமக்கு ‘மருதநிலம்’ பிடிக்கும் என்று கூற, சேலத்திலிருந்து வந்திருந்த பாவாணரோ, தமக்கு மலையும் மலைச்சார்ந்த ‘குறிஞ்சி நிலம்’தான் பிடித்தம் எனக்கூறினார்.

 

பல்வேறு அறிஞர்களின் கருத்தையெல்லாம் கேட்டு கொண்டு ஒரு புறம் தலையணையில் சாய்ந்திருந்த பாவேந்தர் பாரதிதானாருக்கு எந்த நிலம் பிடித்தம் என திருக்குறள் முனுசாமி வினவினார்.

 

அதற்கு பாவேந்தர் ‘எனக்குத் தானே, எனக்குப் பிடித்தது ‘தமிழ்நிலம்’தான்! நாம் அனைவரும் வாழக்கூடிய நம் தமிழ்நிலம்தானே’ எனப் பெருமிதமாக கூறினார். அண்ணல்தங்கோ அப்போது நடத்திவந்த ‘தமிழ்நிலம்’ வார இததிணையும் இரட்டைப் பொருளாகப் பாவேந்தர் பெருமையாகக் குறிப்பிட்டது, அங்கு குழுமியிருந்த அறிஞர்கள் அனைவரும் பெருமகிழ் கொண்டனர்.

 

இந்த தமிழ்நிலம் வார இதழில் பாவேந்தர் பாரதிதாசனார் அண்ணல்தங்கோவைப் போற்றி எழுதியுள்ள தனிசிறப்பான கவிதை இங்கே:

 

அண்ணல்தங்கோவைப் புகழ்ந்து பாவேந்தர் பாடிய பா – ‘தமிழ்நிலத்தில்’ 01-06-1949இல் வெளியானது.

 

அண்ணல்தங்கோ

 

நீண்ட நெடுந்தோற்றம்

நேர்மை தவறாதான்

பாண்டிய நாட்டுப்

பழந்தமிழே யாண்டும்

மொழிவான்; மொழிப்போரில்

மூத்தோன் பகைக்குப்

பொழிவான் இடியின் புயல்.

 

தமிழர் திருநாளைத்

தன் பொருள் ஈந்தே

தமிழறிஞர் தம்மை

அழைத்துத் தமிழுணர்வை

ஊட்டுவான் அண் ணல் தங்கோ

ஆரியரை ஊரறிய

ஓட்டுவான் ஓடுஓடென்று.

 

செந்நீரை இந்திய

நாட்டிற்குச் சிந்தினான்

கண்ணீரைத் தந்ததிந்த

காங்கிரசு, வெந்நீரைச்

செந்தமிழர் வேருக்குப்

பாய்ச்சியதும், போராட

அத்தமிழ்க் காணான் அரண்.

 

தமிழ்நிலத்தை மீட்கத்

தமிழ்நில ஏட்டைத்

தமிழ்நலத்தோ டீந்தான்

தமிழர், தமிழ்மொழி

தாய்நாட்டுக் கென்றே

தனையிந்தான்; ஈந்தானே

நோய்நாட்டுக் கேற்ற மருந்து!